Mountain View Mountain View

அவனது மடல்



அவனது மடல் அது! இல்லை! இல்லை! நான் அவசரமாய் மறுக்கிறேன் . அவன் மனம் தானது !
அவளுக்கான
அந்த மடலில் என்னையும்
பங்கு கொள்ளவைக்கும்
அவன் பெரிய உள்ளம்
சிறிய பந்தியை பகிர்ந்து .
அவளுக்கு அவன்
பிரியமுள்ள காதலன்.
எனக்கு நேசம்
நிறைந்த நண்பன்.
காவலரணில்
கண் விளித்திருந்திருப்பானோ ..?
கடுங்குளிரில் நடுங்கி
நலிந்தே எழுதியிருப்பானோ ..?
அவகாசம் கிடைத்த
நொடிகளில் அனேகமாக
வரைந்திருக்கலாம் .
கொஞ்சம் கிறுக்கலாக
அவன் கையெழுத்து!
பசுமுதல் பூனை வரைக்கும்
நலம் விசாரிக்கும்
அவன் பாசத்தின் விசாலத்தை
எப்படிச்சொல்ல ..?
முற்றத்துச் செம்பருத்தி
கொல்லையில் ஆமணக்கு
எல்லையில் கார்த்திகைக்
கொடிகளையெல்லாம்
அந்த உயிராயுதத்தை
அணைத்தபடியே நலம்கேட்டு
எழுதி இருக்கிறானே!!!
தன் உறவுகள் முதல்
பக்கத்து ஊர் கடைசி
மனிதர்வரை எப்படித்தான்
நினைவில் வைத்து
நலம் கேட்க முடிந்தது அவனால்!
விழிகளை விரிய வைக்கும்
சில வசனத்தை கண்டேன்...
நெரிசல் கொண்டு நிற்கும்
இந்தக் களமுனையில்
தடைகளை உடைக்கையில்
என் உயிர் போகலாம்!
வாழ்ந்துகொண்டே
போராடுதலை அல்ல .
போராடிக்கொண்டே
வாழ்தலை நேசிக்கிறேன் .
வா..! அன்பே ...
வீழ்ந்து போன பின்
என் துப்பாக்கி ஓயக்கூடாது ...
அங்கே உனக்கும் ஓய்வு கிடைத்தால்
வா ..! வந்தென்
கல்லறையின் அருகில் தூங்கு...
சுதந்திரக்காற்று இந்த
பூமியில் வீசுகையில்
மறுபிறவி எடுத்து வருவோம் .
இப்போதெல்லாம் அவர்கள்
விதைக்க பட்ட நிலத்தின்
அருகுள்ள தெருக்களை
கடக்கையில் அந்த
உண்மை காதலர்களின்
தேசக் காதல் என்
நெஞ்சில் விரிகிறது

அவனது மடல் அவனது மடல் Reviewed by Unknown on July 22, 2015 Rating: 5

No comments: