Mountain View Mountain View

அப்துல் கலாம் எனும் பொக்கிசம் ! சிறப்பு கட்டுரை

கதிரவன்


நமது தாயகத்தின் பெருமையைத் தலைநிமிரச் செய்த மாமேதை இன்று நம்மிடம் இல்லை, உலகம் போற்றும் உன்னத மனிதராக திகழ்ந்தவர் அவர், நம் நாடு ஜனாதிபதி என்ற பதவியை கொடுத்து பல பேரை அழகுபடுத்தியிருக்கிறது. ஆனால் அந்த ஜனாதிபதி என்ற பதவிக்கே அழகுபடுத்தியது இவர் ஒருவர் மட்டுமே. 


இந்தியா வல்லரசாகும் என்று அதீத கனவு கண்ட நபரும் முன்னாள் ஜனாதிபதியுமானவர் இவர் ஒருவரே, மக்களோடு நெருங்கியே இருந்த ஒரே ஜனாதிபதி. தமிழகத்தின் தெற்கே இராமேஸ்வரத்தில் 1931 இல் பிறந்த அவர் இந்தியாவின் ஏவுகணைத் திட்டத்தின் முன்னோடியாகத் திகழ்ந்தார்.

மிக சாதாரண குடும்பப் பின்னணி கொண்டு மிகப் பெரிய புகழ் பெற்றார், நம்முடைய அடையாளம் ஒன்று இன்று அழிந்துவிட்டது என்றே தோன்றுகிறது, ஒரு கடலோரப் படகுக்காரர் மகன் கடலளவு விரிந்து இமயமாய் உயர்ந்தவர் .

ஒரு கவிஞன் விஞ்ஞானி ஆன அதிசயம் ! நாட்டின் உயரிய ஜனாதிபதி பதவியில் இருந்தபோதும் தனக்கென்று எதையும் சேர்த்து வைக்காதவர் தன்னலம் கருதாது நாட்டு மக்களுக்காக அயராது உழைத்தவர். பதவியில் இருக்கும்போது ஐந்து அடுக்கு பாதுகாப்பை விரும்பாதவர், தன் பாதுகாப்புக்காக ஒரு சாதாரண காவலரை வைத்துகொண்டவர் ஒரு தலைசிறந்த தலைவர;, 

அறிவியல் அறிஞராக இருந்தாலும் சாமானிய மக்களிடமும் அரசியல் தலைவர்களிடமும் தனது எளிமையான வாழ்க்கை, நேர்மை, கடின உழைப்பு காரணமாக அளப்பரிய அன்பையும் மரியாதையையும் பெற்றவர் கலாம். மிக நெருக்கடியான அரசியல் நேரத்தில் குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்று பல்வேறு நெருக்கடிகளை வெகு அனாயாசமாக சமாளித்து சிறந்த முன்மாதிரியை உருவாக்கினார். 

பாதுகாப்பு வளர்ச்சி, ஆராய்ச்சி நிறுவனத்தில் இளம் அறிவியல் அறிஞராகப் பணியில் சேர்ந்தபோது, இந்தியத் தரைப்படைக்காக சிறு ஹெலிகாப்டரை வடிவமைத்தார் பின்னர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) அவர் தனது ஆராய்ச்சி பணிகளைத் தொடர்ந்தார். 

அங்கு 1980-ம் ஆண்டு எஸ்.எல்.வி.-3 ராக்கெட் மூலம் ரோகினி-1 என்ற செயற்கைக் கோளை விண்ணில் ஏவியதில் முக்கிய பங்காற் றினார். அவரது சேவையைப் பாராட்டி 1981-ல் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. அடுத்து 1990-ல் பத்ம விபூஷண் விருதைப் பெற்றார். 1963 முதல் 1983 வரை இஸ்ரோவில் சிறப்பாகப் பணியாற்றினர, 

பின்னர் 1999-ம் ஆண்டில் பொக்ரான் அணுஆயுத சோதனை யில் கலாம் முக்கிய பங்காற்றினார். இதேபோல அக்னி, பிருத்வி, ஆகாஷ் உட்பட ஐந்து ஏவுகணை திட்டங்களில் முக்கிய பணியாற்றி உள்ளார். 


அவரை கவுரப்படுத்தும் விதமாக 1997-ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவை தவிர 30-க்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்கள் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கியுள்ளன. மேலும் ஏராளமான சர்வதேச விருதுகளையும் அவர் பெற்றுள்ளார், கடந்த 2002 ஜூலை 25-ம் தேதி நாட்டின் 11-வது குடியரசுத் தலைவராக அவர் பதவியேற்றார். 2007 ஜூலை 25-ம் தேதி வரை அவர் பதவி வகித்தார். 


குடியரசுத் தலைவராக பதவி வகித்த போதிலும், மாணவர்களின் மேல் அபாரமான நம்பிக்கை கொண்டிருந்தவர். மாணவர்களுக்கும், அவருக்குமான உறவு மிகவும் பின்னிபிணைந்தது அதற்கு உதாரணமாக திகழும் வகையில் ஐ.ஐ.எம் கருத்தரங்கில் பேசிக் கொண்டிருக்கும் போதே தன்னுடைய இறுதி மூச்சினை நிறுத்திக் கொண்டுள்ளார் கலாம். 

உலகில் இந்தியா ஒரு மிகப் பெரிய வல்லரசாக வேண்டும் என்று கனவு கண்டார். அவரது காலத்தில் அது நிறைவேறவில்லை. இனியாவது அவரது கனவை நாம் நிறைவேற்ற முயற்சி செய்ய வேண்டும், இவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் இருந்தோம் என்று பெருமையுடன் இருப்போம் . 
அப்துல் கலாம் எனும் பொக்கிசம் ! சிறப்பு கட்டுரை அப்துல் கலாம் எனும் பொக்கிசம் ! சிறப்பு கட்டுரை Reviewed by Unknown on September 05, 2015 Rating: 5

No comments: