Mountain View Mountain View

இன்றைய சமய சிந்தனை !




இஸ்லாம் தரும் சமத்துவம்.

சமத்துவம் என்பது இஸ்லாத்தின் அடிப்படைகளுள் ஒன்றாகும். இஸ்லாம் தரும் சமத்துவத்தைக் குறிப்பிட சமத்துவம் என்ற வார்த்தையைவிட ‘நியாயம், நேர்மை’ என்ற வார்த்தைகளே பொருத்தமானதாக அமையும்  இங்கே சமத்துவம் என்பதை ஒரே மாதிரியானது அல்லது ஒன்றைப்போல் மற்றொன்று என்று பொருள் கொண்டுவிடக் கூடாது.
இஸ்லாம், இறைவனின் முன் அனைவரும் ‘சமம்’ எனக் கூறுகின்றது. இதற்கு மனிதர்கள் தங்களுக்குள் ஒரே மாதிரியாக இருப்பார்கள் என்று பொருளல்ல. மனிதர்கள், தங்கள் திறமைகளால், தகுதிகளால், அவர்கள் கொண்டிருக்கும் ஆசைகளால், செல்வங்களால் வேறுபட்டு நிற்பவர்களே. ஆனால் இவைகளில் எதுவும் ஒரு மனிதனின் அந்தஸ்தை இன்னொரு மனிதனின் அந்தஸ்திலிருந்து உயர்த்தி விடாது. அதுபோலவே இவைகளில் எதுவும் ஒரு இனத்தை இன்னொரு இனத்தை விட உயர்ந்ததாக ஆக்கிவிடாது.


மனிதனின் கோத்திரம் அல்லது குலம், மனிதனின் நிறம், மனிதன் பெற்றிருக்கும் செல்வங்கள், அவன் சமுதாயத்தில் வகிக்கும் அந்தஸ்து இவைகளில் எதுவும் இறைவன் முன் ஒரு மனிதனைவிட இன்னொரு மனிதனை உயர்ந்தவனாக ஆக்கிடாது. இறைவன் இவைகளை அடிப்படையாகக் கொண்டு மனிதர்களுக்கிடையே பாகுபாடுகளை ஏற்படுத்துவதில்லை. இறைவன் மனிதர்களை அளக்கின்ற அளவுகோல் அவர்கள் கொண்டுள்ள இறையச்சமேயாகும். இறையச்சத்தின் அடிப்படையிலிருந்து இறைவன் மனிதர்களுக்கிடையில் எந்த பாகுபாட்டையும் ஏற்படுத்துவதில்லை. இறைவன் மனிதர்களை அவர்கள் செய்கின்ற நற்செயல்களையும், தீய செயல்களையும் அடிப்படையாகக் கொண்டே பிரித்தறிகின்றான்.
குலம், கோத்திரம், நிறம், சமூக அந்தஸ்து இவைகளின் அடிப்படையில் எழும் வேற்றுமைகள் தற்செயலானவைகளே! இறைவனின் பார்வையில் இவைகள் எந்த வேற்றுமையையும் ஏற்படுத்துவதில்லை. சமத்துவம் என்பது, அரசியல் சட்டம் அமைத்துத் தருவதல்ல, சில சீமான்கள் போடும் பிச்சையுமல்ல, அல்லது சிலர், பலருக்கு தருகின்ற நன்கொடையுமல்ல. சமத்துவம் என்பது நம்பிக்கையின் (ஈமானின்) ஒரு பகுதியாகும். இதை ஒரு முஸ்லிம் அக்கறையுடன் எதிர்பார்க்கின்றார். தானும் அடுத்தவர்களை அப்படியே சமமாக நடத்துகின்றார். இஸ்லாம் வழங்கும் இந்த சமத்துவம், அதன் சமுதாய அமைப்பில் ஆழமாக வேறூன்றி நிற்கின்றது. அது பின்வரும் அடிப்படைகளின் கீழ் அமைகின்றது
. மனிதர்கள் அனைவரையும் படைத்தவன் அந்த ஏக இறைவனே! அவனே மிகவும் உயர்ந்தவன்.
 மனிதர்கள் அனைவரும் ஆதம், ஹவ்வா என்ற பெற்றோர்களின் பிள்ளைகளே! ஆகவே அவர்களுக்குள் ஏற்ற தாழ்வுகள் இல்லை.                                                                                                                                                  இறைவன் தனது படைப்பினங்கள் அனைத்தையும் நீதியுடனும், நேர்மையுடனுமே நடத்துவான். அவன் எந்த இனத்திற்கும் தலை சாய்ப்பவனல்ல. இந்த பிரபஞ்சங்கள் அனைத்தும் அவனது படைப்பே! அனைத்தும் அவனது அதிகாரத்தின் கீழ் இருப்பவைகளே! அனைத்தும் அவனுக்கே சொந்தம்!
மனிதர்கள் பிறக்கும்போது தங்களோடு எதையும் கொண்டு வந்தவர்களல்ல என்ற வகையில் எல்லோரும் பிறப்பால் சமமானவர்களே! அதுபோலவே, மனிதர்கள் இறக்கும்போது தங்களோடு எடுத்துச் செல்பவைகள் எதுவுமில்லை என்ற வகையில் அவர்கள் அனைவரும் சமமானவர்களே!
 இறைவன் ஒவ்வொரு மனிதனையும் அவனது செயல்களைக் கொண்டே தீர்மானிக்கின்றான்.
இறைவன் மனிதர்களுக்கு ஒரு உயர்ந்த அந்தஸ்தை தந்திருக்கின்றான். அது ‘மனிதன்’ என்ற அந்தஸ்தாகும். மனிதன் படைப்புகள் அனைத்திலும் அழகானவன். உயர்ந்தவன். ஆனால் மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள் இல்லை.
இவைகள் இஸ்லாம் வழங்கும் சமத்துவத்தின் சில அடிப்படைகளாகும். இஸ்லாம் வழங்கும் இந்த சமத்துவம் முற்றாக செயல்படுத்த படுமேயானால், சமுதாயத்தில் அநீதிகளுக்கும், மாச்சரியங்களுக்கும் அறவே இடமிருக்காது. இறைவனின் வாழ்க்கைத் திட்டமாம் இஸ்லாம் நிலைநாட்டப்படும் போது தாழ்த்தப்பட்டவர்கள், அழுத்தப்பட்டவர்கள், அமுக்கப்பட்டவர்கள் என்பனவற்றிற்கு கிஞ்சித்தும் இடமிருக்காது.
உயர்ந்தவன் – தாழ்ந்தவன், ஆண்டான் – அடிமை, எஜமான் – ஏவலாள், சாமானியர்கள் – சீமான்கள் என்ற வார்த்தைகள் பொருளற்றவைகள் ஆகிவிடும்.
நன்றி

றம்சியா சமீம்.

இந்து சமய சிந்தனை !

தாவரங்களுக்கு நம்ப முடியாத அபூர்வ சக்திகளும் உண்டென்கின்றன. ஆராய்சிக் கட்டுரைகள். அந்த வகையில் வெற்றிலையும் நமது வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வெற்றிலையை வைத்து நாம் ஆரம்பிக்கின்ற காரியங்கள் அனைததும் வெற்றியைத் தரும் என்பதால் வெற்றிலை (வெற்றி + இலை) என்று அழைக்கப்படுவதாகச் சிலர் கூறுவார். ஆனால் இந்த வெற்றிலைக் கொடி பூக்காமல், காய்க்காமல் பழுக்காமல் வெறும் இலையை மட்டுமே தருவதால் இது வெற்றிலை (வெற்று + இலை) என்று அழைக்கப்படுகிறது. முற்காலத்தில் ஒருவர் மற்றொருவருக்கு ஒரு பொருளை விற்கவோ அவரிடமிருந்து ஒரு பொருளை வாங்கவோ வேண்டுமென்றால் அதற்குரிய பணத்தை ஊர்ப் பெரிவர்களின் முன்பாக வெற்றிலை பாக்குடன் சேர்த்துக் கொடுத்தே மாற்றிக்கொள்வர். அப்படி வெற்றிலையை சேர்த்துக் கொள்வதன் மூலமாக உறவு வளரும் என்று நம்பப்பட்டது. அதனால்தான் இன்றும் கல்யாணத்துக்கு முன்பாக ’நிச்சயதாம்பூலம்’ மாற்றும் வழக்கம் வெற்றிலையை அடிப்படையாகக் கொண்டு நடைபெறுகிறது. குருகுலத்தில் குருவுக்கு சீடனும், குடும்பங்களில் கணவனுக்கு மனைவியும் வெற்றிலை மடித்துக் கொடுப்பது மற்றும் வீட்டுக்கு வருபவர்களுக்கு வெற்றிலை கொடுப்பது போன்ற வழக்கமும் இந்த நோக்கத்தைக் கருத்திற்கொண்டே கடைப்பிடிக்கப்பட்டன. இவை மட்டுமன்றி தெய்வத்துக்கும் நமக்கும் இடையிலான அன்பும் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் என்ற பாவனையாகத்தான் அர்ச்சனையின் போது மறக்காமல் இப்போதும் இறைவனுக்கு தாம்பூலம் சமர்ப்பிக்கிறோம்.

அடுத்து எலுமிச்சம்பழம்….. இந்த எலுமிச்சம்பழமானது தோல்காய்ந்து போனாலும் அதனுள் சாறு வற்றாமல் இருக்கும். அதுபோன்று நம்மிடையே இருக்கின்ற உறவு எனறென்றும் வற்றிவிடாமல் இருக்கவேண்டும் என்ற பாவனையில்தான் ஒருவரைச் சந்தித்தவுடன் எலுமிச்சம்பழம் கொடுப்பதும் கொண்டாட்டங்களில் கலந்து கொள்பவர்களுக்கு (வெற்றிலைப் பையினுள்) எலுமிச்சம்பழம் கொடுப்பதும் வழக்கமாக இருந்தது.


கிறிஸ்தவ சிந்தனை

''இயேசு மகதலா மரியாவிடம், 'ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?' என்று கேட்டார்'' (யோவான் 20:15)
மரியா மகதலா யார்? இக்கேள்விக்கு வரலாற்றில் பல பதில்கள் தரப்பட்டதுண்டு. கி.பி. நான்காம் நூற்றாண்டில் மகதலா மரியா மனம் திரும்பிய ஒரு பாவியாகச் சித்தரிக்கப்பட்டார். முதலில் அவர் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்ததாகவும், இயேசுவைச் சந்தித்ததிலிருந்து அவர் மனம் மாறி, கடின தபசு மேற்கொண்டு வாழ்நாள் முழுவதும் தம் பாவத்திற்காகத் தவம் செய்ததாகவும் வரலாறுகள் எழுந்தன. ''ஏழு பேய்கள் நீங்கப் பெற்ற மகதலா மரியா'' இயேசுவின் சீடராக மாறினார் என லூக்கா நற்செய்தியில் வருகின்ற குறிப்பின் அடிப்படையில் (காண்க: லூக் 8:1-3), மரியா பெரிய பாவியாக இருந்தவர் என முடிவுசெய்தனர் சிலர். ஆனால் நோய்களுக்குக் காரணம் தீய ஆவிகளே என்னும் நம்பிக்கை நிலவிய அக்காலத்தில் மரியாவை இயேசு ஒரு நோயிலிருந்து குணப்படுத்தியிருப்பார் என முடிவுசெய்தலே சரி. பெத்தானியாவில் இயேசுவின் காலடிகளில் நறுமணத் தைலம் பூசிய மரியா கதையும் (யோவா 12:1-8), சீமோன் என்பவரில் இல்லத்தில் இயேசுவின் தலைமேல் எண்ணைய் பூசிய பெண் கதையும் (மாற் 14:3-9), அப்பெண் ''பாவியாக'' இருந்தார் என்ற குறிப்பும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு ஒரே கதையாக மாற்றம் பெற்றன. இவ்வாறு மகதலா மரியா பற்றிய கதை எழுந்தது.
ஆனால் மகதலா மரியாவின் உண்மை வரலாறு இயேசுவின் உயிர்த்தெழுதலோடு இணைந்து பிணைந்ததாகும். கிறிஸ்தவ சமய நம்பிக்கைக்கு மையமாக இருப்பது இயேசு சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்தார் என்னும் உண்மையாகும். மகதலா மரியாதான் உயிர்த்தெழுந்த இயேசுவை முதல்முறையாகக் கண்டவர். அவரிடம் இயேசு ஒரு பொறுப்பை ஒப்படைக்கிறார். அதாவது மரியா சென்று, இயேசுவின் சீடர்களைச் சந்தித்து, அவர் உயிர்பெற்றெழுந்த செய்தியை அறிவிக்க வேண்டும் (காண்க: யோவா 20:17-18). உண்மையிலேயே ''திருத்தூதர்களுக்குத் தூது அறிவிக்க அனுப்பப்பட்டவர்'' மரியா ஆனார். நான்கு நற்செய்தி நூல்களிலும் இச்செய்தி குறிக்கப்பட்டிருப்பதை நாம் கருதலாம் (காண்க: யோவா 20:1-18; மாற் 16:9-11; மத் 28:1-7; லூக் 24:1-12). இயேசு உயிர்பெற்றெழுந்த ஆண்டவராக நம்மிடையே தங்கியிருக்கிறார் என்னும் உண்மையை உலகெங்கும் பறைசாற்ற நாம் அழைக்கப்படுகிறோம். இவ்வாறு நாம் நற்செய்திக்குச் சான்று பகர வேண்டும். இயேசுவின் வழியாகக் கடவுள் நம்மிடையே உறைகிறார் எனவும், உயிர்பெற்றெழுந்த இயேசுவின் ஆவி நம்மை வழிநடத்துகிறார் எனவும் நாம் உறுதியாக நம்ப வேண்டும்; அந்த நம்பிக்கையைப் பிறரோடு பகிர்ந்திட வேண்டும். இப்பொறுப்பை ஆற்றுவதில் மகதலா மரியா நமக்குச் சிறந்த முன் உதாரணம் ஆகிறார்.
மன்றாட்டு:
இறைவா, எங்கள் உள்ளத்தில் உறைந்து எங்களை வழிநடத்துகின்ற இயேசுவின் ஆவியை நாங்கள் அனுபவித்து வாழ அருள்தாரும்











இன்றைய சமய சிந்தனை ! இன்றைய சமய சிந்தனை ! Reviewed by Unknown on September 05, 2015 Rating: 5

No comments: