உள்நாட்டு விசாரணை ஒழுங்கானதும் நீதியானதுமாக இடம்பெறாது என்பதற்கு திருகோணமலையில் இடம்பெற்ற 05 மாணவர்களின் படுகொலையின் விசாரணை உதாரணமாக அமைந்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
மூதூர் தன்னார்வ தொண்டர்கள் 17 பேர் கொலை போன்றவற்றிற்கு அமைக்கப்பட்ட விசேட ஆணைக்குழுவில் வெளிநாட்டு நிபுணர்கள் செயற்பட்ட போதும் அவர்களால் ஸ்ரீலங்கா அரசாங்கத்துடன் நீதியான விசாரணையை மேற்கொள்ள முடியாது என சில மாதங்களில் வெளியேறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான அனுபவங்கள் மூலம் உள்நாட்டு விசாரணையில் தமிழ் மக்கள் நம்பிக்கை இழுந்துள்ளதாகவும், சர்வதேச விசாரணையையே தாம் கோருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தன்னுடைய 33 வருட நாடாளுமன்ற அனுபவத்தில் எதிர்க்கட்சியிலே உள்ளதாகக் குறிப்பிட்ட இரா. சம்பந்தன்,
இருக்கும் நாடாளுமன்ற பிரதிநிதிகளுடன் ஒப்பிடும் போது நீண்டகாலம் எதிர்கட்சியில் இருந்தமையால் இதற்கு பொருத்தமானவன் என எண்ணுவதாகவும் கூறியுள்ளார்.
தமிழ் மக்களுக்கு நியாயமான, அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஏனைய நாடுகளில் வழங்கப்பட்டுள்ள நாகரிகமான தீர்வு ஒன்று கிடைக்கும் வரை தான் எதிர்கட்சியிலேயே இருப்பேன் என உறுதியளித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமிழர்களுக்கு நிரந்தரமான தீர்வு ஒன்று கிடைப்பதற்கு விரும்பவில்லை. மாறாக தமிழ் மக்களுக்கு பிரச்சினை கொடுப்பதன் மூலம் இந்த நாட்டைவிட்டு, குறிப்பாக இளைஞர்களை வெளியேற்றுவதன் மூலம் இந்த நாட்டில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதை சர்வதேசத்திற்கு தெரியப்படுத்த எண்ணியிருந்தார்.
அவ்வாறு தற்போது இந்தியா மற்றும் ஏனைய நாடுகளில் தமிழ் மக்கள் பத்து இலட்சத்திற்கு மேல் வாழ்ந்து வருவதாகக் எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் குறிப்பிட்டார்.
குச்சவெளி பிரதேச பெண்கள் வலையமைப்பால் குச்சவெளி பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளான யானை தொல்லை, மற்றும் சமுர்த்தி முத்திரை இல்லாமை, நிரந்தர வீடுகள் இல்லாமை, காணிகளுக்கான உறுதிப் பத்திரங்கள் இல்லாமை போன்ற பிரச்சினைகள் உள்ளடங்கிய மகஜர் ஒன்றும் எதிர்க்கட்சித் தலைவரிடம், கையளிக்கப்பட்டது.
இதற்கான நடவடிக்கைகளை தாம் துரிதமாக முன்னெடுப்பதுடன் குச்சவெளி பிரதேச மக்களுடைய பிச்சினைகளை தீர்ப்பதற்கான ஒரு விசேட திட்டமிடலை நடாத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் தான் திட்டமிட்டுள்ளதாகவும், இதன்போது மக்களிடம் அவர் உறுதியளித்தார்.
உள்நாட்டு விசாரணை நீதியானதாக இடம்பெறாது; இரா. சம்பந்தன்
Reviewed by Unknown
on
September 21, 2015
Rating:
Reviewed by Unknown
on
September 21, 2015
Rating:




No comments: