Mountain View Mountain View

புள்ளிவிபரங்கள் நாட்டின் அனைத்து விடயங்களுக்கும் முக்கியம்: மட்டு. அரச அதிபர் எம்.சார்ள்ஸ்

புள்ளிவிபரங்களானவை நாட்டின் முக்கியத்துவம் மிக்க அனைத்து விடயங்களுக்கும் பங்களிப்புச் செய்கின்றன. எனவே மக்கள் அனைவரும் தொகை மதிப்பீடுகளின் போது வழங்கும் ஒத்துழைப்பின் மூலமே இது சாத்தியமாகும் என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.




சரியான தரவுகள் ஊடாக மிகச் செழிப்பானதொரு வாழ்க்கை என்ற தொனிபொருளில் நடைபெற்ற உலக புள்ளிவிபர தின மட்டக்களப்பு மாவட்ட நிகழ்வில் பிரதம அதிதியாகக்கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இன்றைய தினம் முற்பகல், மட்டக்களப்பு மாவட்ட புள்ளிவிபரத்திணைக்கள பிரதிப்பணிப்பாளர் எஸ்.எச்.மன்சூர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,
தொகை மதிப்பின் போது வீடுகளுக்கு புள்ளிவிபர உத்தியோகத்தர்கள் செல்கையில் மக்கள் அவர்களைப் பயத்துடன் எதிர் கொள்ளும் நிலை காணப்படுகிறது. இந்த நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும்.

புள்ளி விபரங்களின் முக்கியத்துவத்தினை புள்ளிவிபர ஊத்தியோகத்தர்கள் சரியான முறையில் மக்களுக்குத் தெளிவு படுத்துவதுடன், உத்தியோகத்தர்கள் தங்களது செயற்பாடுகளிலும் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதற்காக புள்ளிவிபரங்கள் குறித்து சரியான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். கொள்கை வகுப்பதிலிருந்து புள்ளிவிபரங்கள் அடிப்படைப் பங்கு வகிக்கின்றன. இது குறித்து மக்கள் கொள்ளும் தெளிவே முக்கியத்துவம் பெறுகின்றன.

நாட்டினுடைய, பிரதேசத்தினுடைய கொள்கை வகுப்புகளில் முக்கியமாக இருக்கிறது. வகுக்கப்படும் கொள்கைகளின் அடிப்படையிலேயே நாட்டிலும் அதன் அத்தனை பிரதேசங்களிலும் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதனை மக்கள் புரிந்து கொண்டு தகவல்களை வழங்க வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபை உலகில் 5 வருடங்களுக்கு ஒரு தடவை புள்ளி விபர தினத்தினை நினைவுகூரும் வகையில் இந்தப்பிரகடனத்தினை மேற்கொண்டுள்ளது. அந்தவகையில் இதன் முழுப்பயனும் உலகுக்கும் நாட்டுக்கும் எமது மாவட்டத்திற்கும் கிடைக்கவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாகும் எனத் தெரிவித்தார்.
புள்ளிவிபரங்கள் நாட்டின் அனைத்து விடயங்களுக்கும் முக்கியம்: மட்டு. அரச அதிபர் எம்.சார்ள்ஸ் புள்ளிவிபரங்கள் நாட்டின் அனைத்து விடயங்களுக்கும் முக்கியம்: மட்டு. அரச அதிபர் எம்.சார்ள்ஸ் Reviewed by Unknown on October 21, 2015 Rating: 5

No comments: