Mountain View Mountain View

தேசிய அரசியல் கொள்கை நாட்டுக்குத் தேவை – பிரதமர்

ஜனாதிபதியின் எண்ணம் நிறைவேறியுள்ளது.
அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாக உருவாக்கப்பட்டுள்ள தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தத்தமது கொள்கைகளை பாதுகாக்கும் அதேநேரம் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தி சர்வதேச தரத்தில் முன்மாதிரியாக திகழ வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வில் உரையாற்றிய போதே பிரதமர் மேற்கண்டவாறு உரையாற்றினார்.
நாட்டில் தேசிய அரசியல் கொள்கை ஏற்படுத்தப்பட வேண்டுமென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணம் நிறைவேறியுள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
அரசியல் கட்சிகள் நாட்டுக்கும் மக்களுக்கும் இதுவரை என்ன செய்திருக்கிறன என்ற பொதுமக்களின் கேள்விக்கான பதில் தேசிய அரசாங்கம் மூலம் கிடைக்கவுள்ளது.
அந்த வகையில் தேசிய அரசாங்கத்துக்கான அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ள இன்றைய நாள் வரலாற்று சிறப்பு மிக்கதாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள தேசிய அரசாங்கத்தின் இந்த முன்மாதிரி அமைச்சரவை இரண்டு வருடங்களுக்கு பரீட்சார்த்தமாக செயற்படுத்தப்படும்.
அதனைத் தொடர்ந்து எதிர்காலத்திலும் அதனை செயற்படுத்துவது குறித்து நாம் ஆராய்வோம் என்றும் பிரதமர் கூறினார்.
நாட்டில் கடந்த 30 வருட காலமாக யுத்தம் இடம்பெற்றது. அதற்குப் பின்னர் 05 வருடங்கள் உருண்டோடின. எவ்வாறான போதும் நாட்டிற்கும் மக்களுக்கும் அவசியமானதை செயற்படுத்துவதில் அரசியல் கட்சிகளுக்கிடையே ஒருமைப்பாடு இருக்கவில்லை.
இதன் காரணமாகவே நாட்டின் அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தேசிய அரசாங்கத்துக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டோம்.
ஜனாதிபதி தேசிய கொள்கையொன்றை நிறுவுமாறு பாராளுமன்றத்திலும் கோரிக்கை விடுத்திருந்தார். நாட்டுக்கு மாற்றம் வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற அனைவரும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும்.
அதற்கு நாம் முயற்சிக்காவிடின் மக்களின் எதிர்பார்ப்பு வீணாகும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
தேசிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி பெறாதவர்கள் பாராளுமன்றில் அல்லது மாவட்ட, மாகாண மட்டங்களிலுள்ள நிர்வாகக் குழுக்களில் அங்கம் வகிப்பதன் மூலம் தேசிய அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க முடியும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
முதலாம் இரண்டாம் உலக யுத்தங்களின் போது யுத்தத்தை வெற்றி கொள்வதற்காக தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டது. இன்றும் ஜேர்மனில் பிரதான கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கத்தை உருவாக்கியுள்ளன.
தேசிய அரசாங்கத்தின் வெற்றி எமது கைகளிலேயே உள்ளன. நாம் வெற்றியுடன் செயற்பட்டால் நாடு வெற்றிபெறும். மாறாக நாம் தோல்வியடைந்தால் நாடும் தோல்வியடையும்.
ஜனவரி 08 ஆம் திகதி நாம் பெற்ற வெற்றியை மேலும் உறுதிப்படுத்தும் முகமாக ஆகஸ்ட் 17 ஆம் திகதி எமக்கு ஆதரவளிக்குமாறு நாம் மக்களை கேட்டிருந்தோம்.
அவர்களின் ஆணைப்படி வெற்றிபெற்று அவர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் முகமாகவே இந்த தேசிய அரசாங்கத்தை உருவாக்கின் றோமென்றும் பிரதமர் தெரிவித்தார்.

தேசிய அரசியல் கொள்கை நாட்டுக்குத் தேவை – பிரதமர் தேசிய அரசியல் கொள்கை நாட்டுக்குத் தேவை – பிரதமர் Reviewed by Unknown on September 06, 2015 Rating: 5

No comments: