Mountain View Mountain View

மீனவப் பிரச்சினைக்கு முத்தரப்பு பேச்சு அவசியம் : இரா. சம்பந்தன் ஆலோசனை

ஸ்ரீலங்கா – இந்திய மீனவர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் டில்லியுடன் மட்டும் பேச்சு நடத்தாது தமிழ்நாட்டு முதலமைச்சருடனும் பேச்சு நடத்த வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். 


ஸ்ரீலங்கா – இந்திய கடற்படையினர் இணைந்து கூட்டுச் சேர்ந்து சேவையை மேற்கொள்வதன் மூலம் இந்திய மீனவர்கள் வடபகுதி கடலுக்கு வருவதை தடுத்து நிறுத்த முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சபையில் ஆலோசனை வழங்கினார்.

இந்திய மீனவர்கள் ஸ்ரீலங்கா கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடிப்பது தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் முன்வைத்த சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இந்திய மீனவர்கள் எமது கடல் எல்லையில் விசேடமாக வடபகுதி கடல் எல்லையில் அத்துமீறி “பொட்டம் ரோலர்களை” பயன்படுத்தி மீன் பிடிக்கின்றனர். இதனால் எமது மீன் வளங்கள் அனைத்தையும் இந்திய மீனவர்கள் அள்ளிக் கொண்டு போவதோடு எமது கடல் வளமும் முழுமையாக சுரண்டப்படுகின்றது. 

எமது மீனவர்கள் இதனால் தமது வாழ்வாதாரத்தை இழக்கின்றனர். வடக்கு கிழக்கு மீனவர்கள் இப்பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளதோடு இப் பிரச்சினை காரணமாக இரு நாட்டு மக்களிடையேயும் பகையுணர்வு ஏற்படுகின்றது. எனவே இதனை தடுக்க அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

வெளிவிவகார அமைச்சருக்கு நான் வேண்டுகோள் ஒன்றை விடுக்கிறேன். அதாவது மீனவர் பிரச்சினை தொடர்பாக டில்லி மத்திய அரசாங்கத்துடன் மட்டும் பேச்சுகளை நடத்தாது தமிழ் நாட்டுடனும் அதன் முதலமைச்சருடனும் பேச்சுகளை நடத்த வேண்டும். இலங்கை, இந்தியா, தமிழ்நாடு என முத்தரப்பு பேச்சுகள் நடத்த வேண்டியது கட்டாயமானதாகும்.

அத்துடன் ஸ்ரீலங்கா கடற்படையினரும், கடலோரக் காவல் படையும் இணைந்து கூட்டு ரோந்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறான நடவடிக்கைகளினால் இந்திய மீனவர்கள் எமது கடல் எல்லைக்குள் வருவதை தடுக்க முடிவதோடு பிரச்சினைகளையும் குறைத்துக் கொள்ள முடியும்.

டில்லியில் நான் இருந்த சந்தர்ப்பத்தில் அந்நாட்டின் உயர் அதிகாரிகளுடன் இது தொடர்பில் கலந்துரையாடினேன். இதன்போது அவர்கள் தெரிவித்த கருத்தானது இந்திய, இலங்கை மீனவர்கள் அனைவரையும் ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்கு பழக்கப்படுத்த வேண்டும் என்பதாகும். அதற்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்கவும் தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இப் பிரச்சினையை தொடரவிடக்கூடாது, இது எமது மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை.

 எனவே விரைவாக தீர்க்க நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். அது நிறைவேற்றப்பட வேண்டும் அதனை விரைவு படுத்த வேண்டும்.

யுத்த காலத்தில் வடக்கு கிழக்கு மீன­வர்கள் கடலில் மீன்பிடிப்பது தடுக்கப்பட்டது. இக்கால கட்டத்தில் அம் மக்கள் கடன் வாங்கியே வாழ்க்கை நடத்தினர். அப்போது எமது கடல் எல்லையில் மீன்பிடியில் இந்திய மீனவர்கள் ஈடுபட்டனர். இன்று யுத்தம் முடிந்து விட்டது எமது மீனவர்கள் மீண்டும் கடனாளிகளாகி மீன்பிடி உபகரணங்களை கொள்வ­னவு செய்து மீன்பிடிக்க முயற்சிக்­கின்றனர்.

ஆனால் அவர்களுக்கு மீன்கள் கிடைப்பதில்லை. இந்திய மீனவர்கள் எமது மீன்களை அள்ளிக் கொண்டு போகின்றனர். அதனால் மீன் வளங்கள் குறைந்து போகின்றன. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் முறைகளால் மீன் உற்பத்தி அழிகிறது. எனவே எமது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கஷ்டத்துடன் வாழ்கின்றனர். இதனால் அரசாங்கம் உடனடியாக முத்தரப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும்- என்றார்.
மீனவப் பிரச்சினைக்கு முத்தரப்பு பேச்சு அவசியம் : இரா. சம்பந்தன் ஆலோசனை மீனவப் பிரச்சினைக்கு முத்தரப்பு பேச்சு அவசியம் : இரா. சம்பந்தன் ஆலோசனை Reviewed by Unknown on October 11, 2015 Rating: 5

No comments: