மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிக்குடி பிரதேசத்துக்குட்பட்ட குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்துக்குள் வெள்ளிக்கிழமை இரவு புகுந்த இனந்தெரியாத நபர்கள், ஆலய விக்கிரகங்கள், மற்றும் சிலைகளை உடைத்துவிட்டுச் சென்றுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
ஆலயத்தின் நவக்கிரகத்தில் வைக்கப்பட்டிருந்த விக்கிரகங்கள், மற்றும் சிலைகள் அடங்கலான 13 சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன.
வழக்கம்போல் அதிகாலை 4.30 மணிக்கு ஆலயத்துக்குச் சென்ற ஆலய பரிபாலனைச்சபைச் செயலாளர், ஆலய விக்கிரகங்கள், உடைக்கப்பட்டு கீழே கிடப்பதை கண்டுள்ளார்.
சில சிலைகள் உடைத்தெடுக்கப்பட்டு அருகில் உள்ள வீதிகளில் தூக்கியெறியப்பட்ட நிலையில் சில சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்பின்னரே ஆலயம் உடைக்கப்பட்டுள்மை தெரிவந்ததாக குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலய நிருவாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் பற்றி அறிந்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் சம்பவ இடத்துக்கு இன்று காலை விஜயம் செய்து நிலைமையை நேரில் கண்டு விசாரித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட குற்ற தடயவியல் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் வருகைதந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதேவேளை வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் பிள்ளையார் சிலை அகற்றப்பட்டு காடுகளுக்குள் வீசப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பில் இரு கோயில்கள் உடைக்கப்பட்டு விக்கிரகங்கள் வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை
Reviewed by Unknown
on
October 25, 2015
Rating:

No comments: