ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்டு கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர், பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐந்து மணித்தியால வாக்குமூலத்தை பெற்றுக்கொண்ட பின்னர் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை கைது செய்யப்பட்டதாக குற்றப்புலனாய்வு பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பில் உள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று பிற்பகல் விசாரணை இடம்பெற்றது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ் ஆகியோரின் கொலைகள் தொடர்பாக இவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.
ஜோசப் பரராஜசிங்கம் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக கடந்த ஜூலை மாதம் குற்றப்புலனாய்வு பொலிஸாா் சிவனேசத்துரை சந்திரகாந்தனிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றிருந்தனர். அதனடிப்படையில் இன்று ஞாயிற்றுக்கிழமையும் விசாரணை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
நடராஜா ரவிராஜ் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயும் பிள்ளையான் பயன்படுத்தியது எனவும் அந்த ஆயுதத்தை முன்னாள் இராணுவ கேர்ணல் ஒருவர் பிள்ளையானுக்கு வழங்கியதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் ஏற்கனவே தெரியவந்தது.
அதேவேளை பிள்ளையான் கைது செய்யப்பட்டமை தொடர்பாக குற்றப்புலனாய்வு பொலிஸார் ஊடகங்களுக்கு அதிகாரபூர்வமாக இன்னமும் அறிவிக்கவில்லை. நாளை திங்கட்கிழமை நீதிமன்றத்தில் பிள்ளையான் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் கூறப்படுகின்றது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு 25ஆம் திகதி மட்டக்களப்பு சென் மோிஸ் தேவாலயத்தில் இடம்பெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்தபோது துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
நடராஜா ரவிராஜ் 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6ஆம் திகதி கொழும்பு எல்விட்டிக்கல மாவத்தையில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான சந்தேக நபர்களின் பெயர் விபரங்களை நேரடிச் சாட்சிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அப்போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்சவிடம் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிள்ளையான் கைது
Reviewed by Unknown
on
October 12, 2015
Rating:
Reviewed by Unknown
on
October 12, 2015
Rating:


No comments: