வந்தாறுமூலை விஸ்ணு வித்தியாலயத்தில் இடம்பெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் நீதிபதி தீர்ப்பு எழுவது போன்றதல்ல அரசியற் களம்: கி.துரைராசசிங்கம்
(S.Rajeev)அரசியற் களத்திலே செயற்படுவதென்பது வெறுமனே நீதிபதி தீர்ப்பு எழுவது போன்றதல்ல. அரசியலில் எத்தனையோ உடன்பாடுகளுக்கு வருவோம் ஆனால் அதனைக் குழப்புவதற்கு இன்னும் எத்தனையோ பேர் செயற்பட்டுக் கொண்டிருப்பார்கள் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.
வந்தாறுமூலை விஸ்ணு வித்தியாலயத்தில் இடம்பெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.
பாடசாலை அதிபர் செ.மோகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பிரதம அதிதிகளாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சா.வியாளேந்திரன் கலந்து கொண்டதுடன்,
அதிதிகளாக கல்குடா வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் தி.ரவி, ஏறாவூர் 02 கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.சிவகுரு, பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது அதிதிகள் பாண்டு வாத்தியங்கள் மற்றும் கோலாட்ட நிகழ்வுகளுடன் அழைத்து வரப்பட்டனர். மாணவர்களின் கலை நிகழ்வுகள் பல இடம்பெற்றதுடன்,
2014ம் ஆண்டு திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், 2014ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் அணிவிக்கும் நிகழ்வும், 2014ம் ஆண்டு சாதாரண தரம், உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் அணிவிக்கும் நிகழ்வு,
பாடசாலை சிறந்த மாணவன் மற்றும் மாணவிக்கு கிண்ணங்கள் வழங்கும் நிகழ்வுடன், பாடசாலை அபிவிருத்தி; சங்கம் மற்றும் வந்தாறுமூலை இந்து அமைப்பின் அன்பளிப்பின் மூலம் 2015ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு அன்பளிப்புகளும் வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன் பாடசாலை சமுகத்தினரால் அதிதிகளும் கௌரவிக்கப்பட்டு அவர்களுக்கு அன்பளிப்புகளும் வழங்கி வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய கால கட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலரால் பல விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளது. அண்மையில் ஒருவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை வெறுமையை நோக்கிச் செல்வதாக கட்டுரை வரைந்துள்ளார். இது மிகவும் கடுமையான காலம். நாங்கள் எந்த விதத்திலும் எமது தலைமையில் நம்பிக்கை இழந்துவிடக் கூடாது என்று இருக்கின்ற காலம்.
13வது திருத்தச் சட்டத்தை இந்தியா அறிமுகப்படுத்தியதற்குப் பிறகு அதற்கு கொடுக்கப்பட்ட திருத்தங்கள் உள்ளடக்கப்படவில்லை என்ற நிலைமையில் அந்த திருத்தங்களைப் பற்றிப் பேசுவதற்காக எமது முன்னாள் செயலாளர் நாயகம் ஐயா அமிர்தலிங்கம் அவர்கள் இந்தியத் தூதுவரைக் காண்பதற்காகப் புறப்பட்டுச் சென்ற நேரத்தில் தான் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அது போல் காந்தி ழுழுக்க முழுக்க இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டவர். இந்துக்களையும் நேசித்தவர் ஆனால் சுதந்திரம் பெற்ற கையோடு அவர் இந்துக்களைக் காட்டிக் கொடுக்கப் போகின்றார் என்று சொல்லி அவரை சுட்டுக் கொன்றார்கள்.
எமது தலைமை தொடர்பில் இவ்வாறு பலவாறு சொல்பவர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டார்கள் வெறுமையை நோக்கிச் செல்கின்றார்கள் என்று எமது மக்களுக்கு படம் போட்டுக் காட்டுவதற்கு எத்தனையோ பேர் முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
அரசியற் களத்திலே செயற்படுவதென்பது வெறுமனே நீதிபதி தீர்ப்பு எழுவது போன்றதல்ல. நீதிபதி தீர்ப்பு எழுதினால் அந்தத் தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படும். ஆனால் அரசியலில் அவ்வாறு அல்ல நாம் எத்தனையோ உடன்பாடுகளுக்கு வருவோம் ஆனால் அந்த உடன்பாடுகளைச் செயற்படுத்துகின்ற போதெல்லாம் அதனைக் குழப்புவதற்கு எத்தனையோ பேர் செயற்பட்டுக் கொண்டிருப்பார்கள் அவ்வாறு குழப்புவதில் வெற்றியடைவது தான் அவர்களது இலட்சியம்.
இப்போது ஏற்கனவே சால்வை போட்டுக் கொண்டு இந்த நாட்டை தானும் தனது சந்ததியும் தான் ஆளும் வாழும் என்று நினைத்துக் கொண்டவர் தன்னுடைய மாளிகையில் சிறையை அமைத்திருந்தவர் தற்போது அதனை சாக்குப் போக்காக பதுங்குகுளி என்று சொல்லிக் கொண்டிருப்பவர். அவரது அணியில் ஆக முப்பத்தாறு பேர் இருக்கின்றார்கள். அவர்கள் இப்போது குழப்பப் பார்க்கின்றார்கள். இவர்களின் குழப்பத்திற்கு நாம் ஆளாகிவிடக் கூடாது.
எமது தலைமை மிகவும் நிதானமாகச் சென்று கொண்டிருக்கின்றது. எம்முடன் இணைந்துள்ள பல உடன்பிறப்புகள் வெவ்வேறு விதமான படங்களைக் காட்டி எமது தலைமைத்துவத்தை முடிவுறுத்த முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் நாமெல்லாம் அவதானமாக இருக்க வேண்டும்.
நாம் ஒரே குரலில் பேச வேண்டும், ஒரே விதமாகப் பேசவேண்டும், விளங்கிக் கொண்டு பேசவேண்டும், நீங்கள் விளங்கியதைப் பேச கூடாது. நாம் யானை பார்த்த குருடன் போன்று இருந்து விடக் கூடாது.
இங்கு பல்வேறு விதமான விமர்சனங்களை வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். சர்வதேச விசாரணையின் போதும் பல கருத்துக்களைச் சொன்னார்கள். ஆனால் எம் பக்கத்தின் கருத்துக்களை மாத்திரம் பார்ப்பதை விட மற்றைய பக்கத்தில் இருப்பவர்கள் என்ன சொல்கின்றார்கள் என்பதை பற்றியும் சிந்திக்க வேண்டும்.
எமது தலைமைத்துவத்தில் நாம் மிகவும் பற்றுறுதியுள்ளவர்களாக இருக்க வேண்டும். இந்த சந்தர்ப்பத்தை மட்டும் விட்டோமாக இருந்தால் எதிர்காலத்தில் தமிழர்களின் இருப்பு என்பது இல்லாத ஒன்றாகப் போய்விடும்.
மகாபாரதத்தில் சூதாட்டத்தில் தர்மனின் நிலையை அறியாத வீமன் எவ்வாறு ஆவேசம் கொண்டான் ஆனால் அவர்கள் வைத்திருந்திருந்த நம்பிக்கை தர்மம் வாழும் என் எண்ணம் அன்று கிருஸ்ணனால் திரௌபதியின் மானம் காப்பாற்றப்பட்டது. தர்மத்தையும் வாழ வைத்தது.
அதுபோல் எமது தலைமை மிகவும் உறுதியான நம்பிக்கையோடு எமது மக்களின் விடுதலைப் பாதையில் மிக உறுதியாக நடந்து கொண்டிருக்கின்றது. சலசலப்புகளுக்கு அடிபணிந்து விடாதீர்கள் எமது தலைமையின் வழி செல்வோம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் விடுதலை எனும் இலக்கு நோக்கிச் செல்லும் அதிலே நாமெல்லாம் அணிவகுத்திடுவோம் என்று தெரிவித்தார்.
வந்தாறுமூலை விஸ்ணு வித்தியாலயத்தில் இடம்பெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் நீதிபதி தீர்ப்பு எழுவது போன்றதல்ல அரசியற் களம்: கி.துரைராசசிங்கம்
Reviewed by Unknown
on
October 30, 2015
Rating:
















No comments: