Mountain View Mountain View

இன்று கந்த சஸ்டி விரதாரம்பம்

முருகனுக்குரிய விரதங்களில் இதுவே தலைமையானது. ஒப்பற்றது. இதனைச் சுப்பிரமணிய சஷ்டி விரதம் என்றும் அழைப்பர்- இது திதி விரதம். `சங்கரன் பிள்ளை சட்டியிலே மாவறுத்தான்' என்று வேடிக்கையாகக் கூறுவார்கள். முருகன் சட்டியிலே மாவை  வறுத்தானாம்! உண்மைதான். 


அவன் சட்டியிலே, சஷ்டி திதியிலே, மா அறுத்தான் = மாமரமாக நின்ற சூரபத்மனைத் அறுத்தான். முருகன் சூரபத்மனுடன் ஆறு நாள்கள் தொடர்நது போரிட்டான். ஆறாம் நாள், மாமரமாகி எதிர்த்துப் போரிட்ட அவனைத் தனது வேலாயுதத்தால் பிளந்தான். 

பிளந்த ஒரு கூறு மயிலாயிற்று. முருகன் அதைத் தன் வாகனமாக ஏற்றான். மறு கூறு சேவலாயிற்று. அதைத் தன் கொடியாக ஏந்தினான். ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாள், அதாவது தீபாவளிக்கு மறுநாள்- பிரதமையில் விரதத்தைத் தொடங்கித் தொடர்ந்து சஷ்டி வரை ஆறுநாள்கள் முருகனை வழிபட்டுக் கடும் விரதம் காப்பது `கந்த சஷ்டி விரதம்' இதனை `மகா சஷ்டி விரதம்' என்றும் கூறுவர். 

வழிபாடு: 

ஆறு நாள்களிலும், காலையில் நீராடி, ஆறு காலங்களிலும், ஆறுமுகனுக்குப் பூஜைகள் செய்ய வேண்டும். கோவில்களுக்குச் சென்று முருகனை வழிபட வேண்டும். கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், சண்முக கவசம் முதலான கவச நூல்களைப் பயிலலாம். 

திருப்புகழ், கலந்தரலங்காரம், கந்தரநுபூதி முதலிய நூல்களை ஓதலாம். `சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்' என்பது ஒரு மொழி. சட்டியில் = சஷ்டி திதியில், இருந்தால் = விரதமிருந்தால்; அகப்பையில் = கருப்பையில்; 

வரும் = கரு தோன்றும். அதாவது மகப்பேறில்லாத மகளிர் சஷ்டி விரதமிருந்து முருகனை வழிபட்டால், அவனது அருளால் மகப்பேறு நிச்சயம் கிடைக்கும் என்பது கருத்து. குமார சஷ்டி விரதம் ஆனி மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டியும், கார்த்திகை மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டியும் குமார சஷ்டி விரதம் எனப்படும். 

கார்த்திகை மாத வளர்பிறைக்கு குமார சஷ்டியைச் `சுப்பிரமணிய சஷ்டி' என்றும், `அனந்த சுப்பிரமணிய பூஜை' என்றும் கூறுவர். அனந்த சுப்பிரமணிய பூஜை: அனந்தன் = நாகம். `சுப்புராயன்' என்ற பெயர் முருகனையும், நாகப்பாம்பையும் ஒருங்கே குறிப்பிடுகிற பெயராம். 

திருமணமாகி நீண்ட காலம் மகப்பேறில்லாதவர்கள் அனந்த (நாக) சுப்பிரமணிய பூஜையை நிறைவேற்றினால் மகப்பேறு நிச்சயம் கிடைக்கும்.  முருகனைப் பாம்பு வடிவத்தில் வழிபடலாம். அல்லது, இணைந்த இரு பாம்புகளுக்கிடையில் அமைந்த முருகனையோ, பாம்பின் முடிமீது அமைந்த முருகனையோ வழிபட்டால் நாக தோஷங்களும், பிற தோஷங்களும் விலகும்.  

நாக சுப்பிரமணியர் வழிபாடு கர்நாடகத்தில் அதிகமாக உள்ளது. இத்தகைய வடிவம் எளிதில் கிடைக்காது. இதற்கு நிகராக இரு தேவியருக்கு இடையில் எழுந்தருளிய முருகனை வழிபடலாம். பக்தர்கள் மகப்பேற்றை வேண்டினால் முந்தி வந்து அருள் புரிபவன் முருகன். அவனே குழந்தையாக வடிவெடுத்து வருவான் என்றும் நம்புகின்றனர். 
இன்று கந்த சஸ்டி விரதாரம்பம் இன்று கந்த சஸ்டி விரதாரம்பம் Reviewed by Unknown on November 12, 2015 Rating: 5

No comments: