Mountain View Mountain View

மக்கள் ஆலயங்களில் தஞ்சம் ! மன்னாரில் தொடர் மழை;

தொடர்ச்சியாக பெய்துவரும் கடும்மழை காரணமாக மன்னார் தீவு மற்றும் பெருநிலப்பரப்பில் உள்ள பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக கடும் மழை பெய்துவருகின்றது.

இதனால் பல கிராமங்களில் உள்ள வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

மன்னார் - யாழ்ப்பாணம் ஏ - 32 பிரதான வீதியின் பாலியாற்று பகுதியில் உள்ள பாலத்திற்கு மேலால் சுமார் 5 அடிக்கு மேலாக வெள்ள நீர்பெருக்கெடுத்துள்ளதனால் போக்குவரத்து நடவடிக்கைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

குறித்த பாலத்தை கடப்பதற்கு மக்கள் உழவு இயந்திரத்தை பயன்படுத்துவதுடன் வெள்ளங்குளம் பகுதியில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் அங்குள்ள கோவில் ஒன்றில் தஞ்சமடைந்துள்ளனர்.

இதேவேளை பாலியாறு பெருக்கெடுத்துள்ளதனால் பாலியாற்று பகுதியில் வசிக்கும் 25 குடும்பங்களைச் சேர்ந்த 98 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

இதேவேளை சிலாபத்துறை - புத்தளம் பிரதான வீதியில் வெள்ளநீர் பெருக்கெடுத்துள்ளதனால் இளவன்குளம் வீதியூடான போக்குவரத்துக்களும் பாதிப்படைந்துள்ளன.

அனுராதபுரம் நாச்சியாதீவு குளத்தின் அனைத்து அணைக்கட்டுக்களும் திறந்து விடப்பட்டுள்ளமையினால் மல்வத்து ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

இதனால் மடுக்கரை, அச்சங்குளம், இராசமடு ஆகிய கிராமங்களிலும் தற்போது வெள்ளநீர் சூழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மூர்வீதி, உப்புக்குளம், பள்ளிமுனை, நலவன்வாடி, பெரியகடை, சின்னக்கடை, சௌத்பார், சாந்திபுரம், பனங்கட்டுக்கோட்டு, எமிழ் நகர், எழுத்தூர் ஆகிய கிராமங்களிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

தற்போது வெள்ளநீரை கடலுக்கு அனுப்பும் நடவடிக்கைகளில் மக்களும் அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர். 
பாதிக்கப்பட்ட இடங்களை மன்னார் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல்,  அனார்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட இணைப்பாளர் முஹமட் றியாஸ் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளதுடன் வெள்ளநீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் இடம்பெயரும் மக்களுக்கு உலருணவுகளை வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.





மக்கள் ஆலயங்களில் தஞ்சம் ! மன்னாரில் தொடர் மழை;  மக்கள் ஆலயங்களில் தஞ்சம் ! மன்னாரில் தொடர் மழை; Reviewed by Unknown on November 16, 2015 Rating: 5

No comments: